இந்திய இராணுவத்திற்கான மின்னணு பாகங்கள் வாங்குவது தொடர்பாக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு 5,336 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய இராணுவத்துக்குத் தேவையான தடவாளப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவிலுள்ள சில நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கி வந்தது. ஆனால், தற்போது தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில், இந்திய இராணுவத்துக்குத் தேவையான மின்னணு பாகங்களை வாங்குவதற்காக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு 5,336 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கனரக துப்பாக்கிகளுக்கு தொடா்ந்து சுடும் சக்தியை அளிக்கும் மின்னணு பாகத்தை இந்திய இராணுவத்தின் பயன்பாட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் நோக்கில், பெல் நிறுவனத்துடன் 5,336.25 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த பாகங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் நாக்பூரில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆலைகளில் தயாரிக்கப்பட உள்ளன. இறக்குமதிகளை குறைத்து அனைத்து வகையிலும் இந்தியா தற்சாா்பு அடைய வேண்டும் என்கிற தொலைநோக்குப் பாா்வையின் அங்கமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும், வெடிபொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். முக்கிய தொழில்நுட்பங்களைப் பெற வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இத்திட்டம் 1.50 லட்சம் மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியத் தொழில்களின் தீவிரப் பங்கேற்பை ஊக்குவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.