யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, எட்டெக் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியாவில் செயல்படும் சில உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்லூரிகளுடன் இணைந்து யு.ஜி.சி.யால் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் வழங்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சில எட்டெக் நிறுவனங்கள் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில், சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆன்லைன் பட்டம் மற்றும் டிப்ளமோ திட்டங்களை வழங்குவதாக விளம்பரம் செய்து வருகின்றன.
இதையறிந்த பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) இதுபோன்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று தெரிவித்திருப்பதோடு, இதுபோன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதுகுறித்து யு.ஜி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்து நிறுவனங்களும் யு.ஜி.சி.யின் இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல் விதிமுறைகள் 2023 மற்றும் யு.ஜி.சி.யின் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான கல்விக் கூட்டுறவை இணைந்து டுவின்னிங் ப்ரோகிராம், ஜாயிண்ட் டிகிரி, டூயல் டிகிரி ஒழுங்குமுறைகள் 2022 ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் பெற்ற பிறகுதான் படிப்புகளை தொடங்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட 2 விதிகளின்படி, பிரான்சைஸ் ஏற்பாட்டில் எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் பட்டப்படிப்புகளை வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் செல்லுபடியாகாது. மேலும், இதுபோன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவதற்கான யு.ஜி.சி.-ன் விதிகளின்படி, சர்வதேச அளவில் முதல் 500 இடங்களை பிடித்துள்ள கல்லூரிகள் மட்டுமே இந்தியாவில் வளாகங்களை நிறுவ முடியும். மறுபுறம், ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில், 2 முழுநேர படிப்புகளை தொடர அனுமதிக்கப்படுவார் என்று டூயல் டிகிரி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாணவர் படிப்பின்போது, தான் பயிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.