அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அக்கப்பலைக் காப்பாற்ற இந்திய போர்க் கப்பல் விரைந்திருக்கிறது.
மால்டா நாட்டின் எம்.வி.ருயன் என்கிற சரக்குக் கப்பல் கடந்த 14-ம் தேதி அரபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்கப்பலை சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். உடனே, அக்கப்பல் ஆபத்தில் இருப்பதாக இந்திய கடற்படைக்கு ஒரு பேரிடர் செய்தியை அனுப்பியது.
இதையடுத்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அக்கப்பலை இந்திய கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து நிறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஆபத்திற்கான எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது. அக்கப்பலில் அடையாளம் தெரியாத 6 பேர் ஏறியதாக எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அக்கப்பலை நோக்கி இந்தியக் கடற்படை ரோந்து விமானத்தை அனுப்பியது. தற்போது, அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். மேலும், இந்திய போர்க்கப்பல் ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட அக்கப்பலை இடைமறித்திருக்கும் இந்திய போர்க்கப்பல், அங்கு நிலவி வரும் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அரபிக் கடல் பிராந்தியத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், முதலில் பதிலளிப்பது இந்தியக் கடற்படைதான். இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை உறுதியாக இருக்கிறது. அக்கப்பல் சோமாலியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டிருக்கிறது. எனினும், எம்.வி.ருயன் கப்பலின் கட்டுப்பாட்டை கப்பல் பணியாளர்கள் ஏற்கெனவே இழந்துவிட்டனர்” என்று தெரிவித்திருக்கிறது.
இந்த கடற்கொள்ளையில் சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சோமாலியாவுக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் இக்கடற்கொள்ளையர்கள் ஆக்டிவாக இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் மிகப் பெரிய கப்பலைக் கடத்துவது இதுவே முதல்முறை. 2017-ம் ஆண்டிலிருந்து சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒழிக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்தன. இதன் பின்னரே, ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்.