மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இதில், சென்னை மாவட்டத்தில் அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் வட்டங்களிலும், திருப்போரூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து, நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியும் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் டிச.17 ரேஷன் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.