நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கியக் குற்றவாளி லலித் ஜா கூறுகையில், முதலில் தீக்குளிக்க திட்டமிருந்ததாகவும், பிறகு திட்டத்தை மாற்றியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்துவரும் இக்கூட்டத்தொடரில், கடந்த 13-ம் தேதி பாா்வையாளா் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் மக்களவைக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா்.
அதேபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து உபா மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
மேலும், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான லலித் ஜா புதுடெல்லி போலீஸிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் தீக்குளிக்க முயன்றது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லலித் ஜா போலீஸில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவலில், “நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தீக்குளிக்க திட்டமிட்டோம். தீத்தடுப்பு மருந்து தடவினால் அதிக தீக்காயம் ஏற்படாது என்று கருதினோம். ஆனால், அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே, அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மொபைல் போன்களை அழித்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
எனினும், விசாரணையை திசை திருப்புவதற்காக லலித் ஜா, வாக்குமூலத்தை மாற்றி மாற்றிக் கூறி வருவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தவிர, லலித் ஜா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதாகவும் போலீஸார் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
இதனிடையே, லலித் ஜாவின் தந்தை தேவானந்த் ஜா கூறுகையில், “சம்பவம் குறித்து நேற்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. அத்துமீறலில் எனது மகன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பொறுப்பான குடிமகன். பட்டப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். எனது மகன் குற்றவாளி அல்ல. அருகில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இத்தகைய சம்பவத்தில் ஈடுபடும் நபர் அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியிருக்கிறா.
லலித் ஜாவின் தாயார் கூறுகையில், “எனது மகன் நல்லவர். என்ன நடந்தது என்றே புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்றார். இருவருமே “எங்களது மகன் அப்பாவி” என்று தெரிவித்திருக்கின்றனர்.