நாடாமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி இருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்தி திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர், புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, இச்சம்பவத்தை கண்டித்தும், பிரதமரும், அமித்ஷாவும் பதிலளிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் உட்பட 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்கவே எம்.பி.க்கள் சிலரை சஸ்பெண்ட் செய்தேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. எம். பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை எனக்கு ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியது. எம்.பி.க்கள் அனைவரும் தேசத்திற்காக தங்களது கடமைகளை உண்மையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க எம்.பி.க்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். புகைக் குப்பிகள் வீசப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை மக்களவையில் பகிரப்படும். இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என்பதால்தான் எனது கவலையை அன்றே மக்களவையில் வெளிப்படுத்தினேன்.
மேலும், அன்றே அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கலந்துரையாடினேன். இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணையை தொடங்கி இருக்கிறது. விரைவில் அறிக்கை பகிரப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.