தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 450 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சுமார் ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன. இதில், ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் உள்ள பொறியியல் படிப்புகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த கலந்தாய்வை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆன் – லைன் மூலம் நடத்துகிறது. தனியார் கல்லூரிகளில் உள்ள 50 – சதவீத இடங்களும் ஒற்றைச் சாளர முறையில்தான் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றுள்ளதாகவும், எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.