இந்திய விமானப் படையின் வீரரான விங் கமாண்டர் சாந்தனுவை அவமதிப்பு செய்ததற்காக பிரபல நிறுவனமான ஓலாவிற்கு மாற்றுத்திறனாளி ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விங் கமாண்டர் சாந்தனு வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வெளியூர் செல்லும் போதும், தனக்கு உதவியாக சக்கர நாற்காலி வண்டியைக் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், விங் கமாண்டர் சாந்தனு தனது குடும்பத்துடன் ஓலா வாடகை வண்டியில் செல்வதற்காக தனது செல்போனில் உள்ள ஓலா செயலி மூலம் வண்டியை புக் செய்தார்.
வண்டி வருகைக்காக சாந்தனுவின் குடும்பம் ஆர்வத்துடன் காத்திருந்தது. அதேபோல, கார் வந்த நொடியே சாந்தனு மகிழ்ச்சியுடன் ஓலா வண்டியில் பயணம் செய்ய முயற்சி செய்தார். அப்போது, அவருடைய மனைவி சாந்தனுவின் உதவிக்காக, சக்கர நாற்காலி வண்டியை பின் இருக்கையில் வைக்குமாறு ஓட்டுநரிடம் கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கையை அலட்சியம் செய்த ஓட்டுநர் சற்றுநேரத்தில் காட்டுமிரண்டியாக மாறிவிட்டார். ஆக்ரோஷமாக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி வண்டியை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை சற்று எதிர்பாராத சாந்தனுவும் அவருடைய மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அந்த வண்டியில் பயணம் செய்வதை சாந்தனு தவிர்த்துவிட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். முன்னதாக, தனக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமான சம்பவங்களை தொகுத்து மாற்றுத்திறனாளிகள் ஆணையத்திற்கு ஆதாரங்களுடன் அனுப்பி வைத்தார்.
சாந்தனு அக்டோபர் 2019 இல், தென் கொரியாவில் நடந்த ஆசிய படகோட்டுதல் பயிற்சி முகாம் மற்றும் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இந்திய படகோட்டக் கூட்டமைப்பு அவரைத் தேர்ந்தெடுத்தது. அவர் ஆசியாவில் 5 வது இடத்தைப் பிடித்தார்.
மேலும், மகாராஷ்டிராவின் பாரா ஒலிம்பிக்ஸ் நீச்சல் சங்கம் நடத்திய மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசத்திற்காக தனது உழைப்பை செலுத்தி பதக்கம் வாங்கி கொடுத்த சாந்தனு போன்றவர்களை உற்சாகப்படுத்துவதே ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.