லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் துஷ்டிகலில் விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், விமானப்படை நடத்திய வான்வழி அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இங்கே எனது பல பேச்சுக்களை உங்களால் மிகுந்த கவனத்துடன் கேட்க முடியாமல் போகலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
இன்று நீங்கள் கேடட்டில் இருந்து அதிகாரியாக மாறுகிறீர்கள். கேடட்டுக்கும் அதிகாரிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் பாடங்களை கற்றுக்கொண்டீர்கள். ஆனால் இப்போது அதிகாரிகளாக, நீங்கள் முதலில் மதிப்பீடு செய்யப்படுவீர்கள். அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்வீர்கள் என தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பாசிங் அவுட் அணிவகுப்பின் தருணங்களை நினைவில் கொள்ளுமாறு பட்டதாரி பயிற்சியாளர்களை வலியுறுத்திய ராஜ்நாத் சிங், “இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக, உற்சாகமாக, மகிழ்ச்சியாக, புதிய சிந்தனை மற்றும் இலட்சியத்துடன் இருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியையும் ஆற்றலையும் நினைவில் வைத்துக் கொண்டால் ஆற்றல் மற்றும் புதுமை எப்போதும் இருக்கும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.