காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி கங்கைக் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்துக்கும் தமிழகத்துக்கும் இடையேயான தொன்மையான தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்முறையாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 1 மாதம் நீடித்த இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 2,592 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக இந்தாண்டும் தொடர்கிறது.
இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி, மொத்தம் 13 நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 1,400 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் 5 நாள் பயணத்தின்போது பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் அயோத்தி இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அதேபோல, காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை செல்லும் காசி தமிழ்ச் சங்கமம் புதிய விரைவு இரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட மொழி பெயர்ப்பு நூல்களையும் பிரதமர் வெளியிட்டார். இதில், மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையில் பிரெய்லி முறையிலான திருக்குறள், சங்க இலக்கியம் மற்றும் இலக்கணங்களில் 46 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர, 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் நூல்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், வாரணாசி மற்றும் தமிழகத்துக்கு இடையிலான ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
தொடர்ந்து, தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 19, 20-ம் தேதிகளில் பங்கேற்கிறார்.