கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக, கோரம்பள்ளம் குளம் உடைந்தது. இதனால், குளத்தில் இருந்து வெளியேறும் வெள்ளம் அருகே உள்ள கிராமங்களைச் சூழ்ந்துள்ளது.
கோரம்பள்ளம் குளம் உடைந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால், தூத்துக்குடி நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.