கடந்த 1992 -ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் உருவானது. அப்போது, 13 -ஆம் தேதி அன்று பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ மழையும் கொட்டித்தீர்த்தது.
அதேபோல, பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மி.மீயும், மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ என வரலாறு காணாத கனமழை அருவி போல கொட்டித்தீர்த்தது.
இதனால், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பாய்ந்தது. அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டது.
இதனால், உஷாரன அதிகாரிகள், அணைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அன்று நள்ளிரவிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணையைத் திறந்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் கன அடி நீர், 3 அணைகளில் சீறிப்பாய்ந்தது. ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையும் சேர்ந்து கொண்டதால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் வெள்ளமென பாய்ந்தது.
இதில், பாபநாசம் தொடங்கிக் காயல்பட்டினம் கடற்கரை வரை கரையோரமாக இருந்த குடியிருப்புகள் எல்லாம் நீரில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது.
அன்று நடந்ததைப் போலவே, இன்று, வரலாறு காணாத கனமழையால் நெல்லை வெள்ளத்தில் மிதக்கிறது. திசை எங்கும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போலக் காட்சியளிக்கிறது. இதனால், நெல்லையில் 1992-ல் நடந்ததைப் பொதுமக்கள் கண்ணீரோடு நினைத்து பார்க்கின்றனர்.