ஐ.எஸ்.ஐ.எஸ். நெட்வொர்க் வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் 4 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ். நெட்வொர்க் வழக்கு தொடர்பாக, கடந்த டிசம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது. மகாராஷ்டிராவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து பட்கா போரிவாலி, தானே, மிரா சாலை, புனே உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல, கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பணம், ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில், 2 ஏர் துப்பாக்கிகள், 9 வாள் மற்றும் கத்திகள், 2 லேப்டாப்கள், 6 ஹார்டு டிஸ்குகள், 3 சி.டி.க்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், 68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் 1 இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.