ஐக்கிய நாடுகளின் அமைப்பை சீர்திருத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
பெங்களூருவில் ரோட்டரி இன்ஸ்டிடியூட் நிகழ்வில் உரையாற்றிய ஜெய்சங்கர், “ஐ.நா. சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இந்த கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று கேள்வி எழுப்பினால், பெரும்பாலான நாடுகள் சீர்திருத்தம் தேவை என்ற பக்கமே நிற்கும்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் தற்போது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. ஆனால், பழமையான ‘கிளப்’ போல ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் பிடி நழுவிடக் கூடாது என்று நினைக்கின்றன.
சபையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றன. எனவே, அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் நடைமுறைகள் மீது கேள்வி கேட்கப்படுவதை விரும்பவில்லை. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்தவித சீர்திருத்தங்களும் இன்றி செயல்படுவது, அதன் செயல்பாட்டை பெரிதும் குறைக்கிறது. இது மிகப் பெரிய தோல்வி.
அது இன்றைய உலகத்துக்கு கேடு விளைவிக்கிறது. உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஐ.நா.வின் செயல்திறன் குறைந்து வருகிறது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் கடினமாகி விட்டது. இதற்கு எல்லையில் ஒப்பந்தங்களை சீனா மீறியதே காரணம். எனினும், சீனாவுடன் சிறந்த உறவை இந்தியா விரும்புகிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாடு சீர்திருத்தப் பாதையில் செல்கிறது” என்றார்.