நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால், இது 2040-ல் பன்மடங்கு பெருகும் என்றும் சிங் கூறியிருக்கிறார். ஆர்தர் டி லிட்டில் அறிக்கையும் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 2040-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செய்திச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “இஸ்ரோ இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் 290 மில்லியன் யூரோக்கள் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் 170 மில்லியன் டாலர்கள் ஈட்டி இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சீர்திருத்தங்களைத் தொடங்கி, பொது மற்றும் தனியார் பங்கேற்புக்கு இத்துறையைத் திறந்ததிலிருந்து இந்தியாவில் விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வெறும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை வெறும் ஒற்றை இலக்கத்தில் இருந்து 1,180 ஆக உயர்ந்திருக்கிறது” என்றார்.