கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து மேம்பட்ட வெடிபொருட்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
நாட்டில், ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் நிறையப் பேர் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இதனடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் தீவிர சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை மேற்கொண்டது.
இச்சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 9 வாள் மற்றும் கத்திகள், 2 லேப்டாப்கள், 6 ஹார்டு டிஸ்குகள், 3 சி.டி.க்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், 68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், இன்று காலை முதல் கர்நாடகாவின் பல்லாரி, பெங்களூரு, அமராவதி, மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே, ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் பொகாரோ மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் 1 இடத்திலும் என மொத்தம் 19 இடங்களில் இச்சோதனை நடந்தது.
இச்சோதனையில் கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட், கரி, துப்பாக்கி, சர்க்கரை மற்றும் எத்தனால் போன்ற வெடிக்கும் மூலப்பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள், கணக்கில் வராத பணம், பயங்கரவாத திட்டங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் மினாஸ் உட்பட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பல்லாரி தொகுதியைச் சேர்ந்த 8 செயல்பாட்டாளர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்து தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்திருக்கிறது.