தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு தமிழக தென்மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை எதிர்கொள்வதற்காக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், வெள்ளப் பாதிப்பின் கடுமை குறித்த விவரங்களை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளக் காரணமாக இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரண்டு கட்டுப்பாட்டு அறைகளும், நிலைமையை முழுவதுமாகக் கண்காணித்து வருவதோடு, தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கி வருகின்றன.
தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மாநில துறைகளுடன், தேவையான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் வழங்கத் தொடர்ந்து தொடர்பில் உள்ளது, மேலும், மீட்புப் பணிகளுக்காக, இந்திய ராணுவம் சார்பாக, இன்று காலை 10 மணியளவில், திருவனந்தபுரம் மற்றும் வெலிங்டனில் இருந்து, இரண்டு பட்டாலியன் ராணுவ வீரர்கள் தென் மாவட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய கடற்படை சார்பாக, இந்திய கடற்படையின் மீட்புக் குழுக்கள் மற்றும் ஒரு இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் ஜெமினி படகுகள் ஆகியவை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படை மீட்பு குழுவினர், ஐஎன்எஸ் கட்டபொம்மனில் இருந்து 25 பேரையும், எக்ஸ் பருந்துவில் இருந்து 13 பேரையும் மீட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு தமிழக தென்மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை எதிர்கொள்வதற்காக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்களுக்கும், வெள்ளப்… pic.twitter.com/HSCAIwy52Y
— K.Annamalai (@annamalai_k) December 18, 2023
மேலும், மழை வெள்ளத்தால், ரயில்களில் சிக்கித் தவித்தவர்களுக்கு, இந்திய கடற்படை குழுவினர் உணவுப் பொட்டலங்களையும் வழங்கியுள்ளனர்.
இந்திய விமானப்படை சார்பாக, IAF MI-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மற்றொரு ஹெலிகாப்டரும் நாளை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இன்று மாலை சுமார் 4.30 மணியளவில், சூலூர் விமான தளத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை சார்பாக, தண்ணீர் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருள்களோடு, 6 கடலோரக் காவல்படை ஜெமினி பேரிடர் மீட்புக் குழுக்கள், மற்றும் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டருடன் கூடிய சுஜய் கப்பல் ஆகியவை, தூத்துக்குடி தளத்தில் இருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காகவும், மீட்பு/நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடலோரக் காவல்படையின் இரண்டு சிறு விமானங்களும், ஒரு இலகுரக ஹெலிகாப்டரும் மதுரையில் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் மையத்தில் இருந்து, இலகு ரக காற்றுப் படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் கயாக் வகை படகுகள் உள்ளிட்டவை, மீட்பு வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து மூலம் மீட்புப் பணி கடினமாக உள்ளது.
எனவே அருகிலுள்ள விமானத் தளங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் ஆராயப்படுகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக, தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தென் தமிழகத்திற்கு மொத்தம் 6 மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த 6 குழுக்களும் விரைவில் பாதிப்புக்குள்ளான இடங்களை அடைவர். கூடுதலாக, சென்னையிலும், பேரிடர் மீட்புப் படை தலைமையகத்திலும் மூன்று பட்டாலியன் அணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களுக்கு 18.12.2023 அன்று அனுப்பப்பட்டுள்ள கூடுதல் மத்தியப் படைகளின் விவரங்களாவன இந்திய விமானப் படை சார்பாக 2, கடலோரக் காவல்படை சார்பாக 3 என 5 ஹெலிகாப்டர்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கடலோரக் காவல்படையின் ஒரு கப்பல். இராணுவம் சார்பாக 2, கடலோரக் காவல்படை சார்பாக 7, பேரிடர் மீட்புப் படை சார்பாக 6 என 15 மீட்புக் குழுக்கள். மேலும், மத்திய அரசு, தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த விரைவான நடவடிக்கைகள் மூலம், வெள்ளச் சூழலில் இருந்து தென் மாவட்டப் பொதுமக்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.