நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம். அதேபோல, ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
மத்தியத் தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் ஏராளமான அகதிகள் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இவ்வாறு நுழையும் அகதிகளால் சமீப காலமாக உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே, சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க, அந்நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கட்டமாக சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அகதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி அமைப்பு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அல்பேனியா பிரதமர் எடி ரமா, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து அதிகளவில் அகதிகள் வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும், அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக பொது நிதியை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், இக்கூட்டத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் பேசும் மெலோனி, “நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன்.
இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சௌதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சௌதி அரேபியா நாட்டில் மதக் கோட்பாடுகளை கைவிடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தக் கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளிலும் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும், மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்தும் இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. ஆகவே, ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே, போலந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், தீவிரவாதிகளும் ஊடுருவுவதாக அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.