திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்பு 2015 -ல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஆனால், 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆயோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதி ஜெயந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்றும், 64.90 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது என்றும், தெரிவித்தார்.
எனவே, அமைச்சர் பொன்முடியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே, தண்டனை விவரங்கள் வரும் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம், பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.