நாடாளுமன்றத்தல் புகை குண்டு வீசி தாக்கியவர்கள் வாட்ஸ் குழு அமைத்து செயல்பட்டு வந்தது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் பெயர்களில் 6 வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்தக் குழுக்களின் பிற உறுப்பினர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளை தொடர்ந்து விவாதிப்பார்கள் என்றும், அது தொடர்பான வீடியோ கிளிப்களையும் பகிர்ந்து கொள்வார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அரட்டைகள் பற்றிய விவரங்களும் மெட்டாவிடம் இருந்து காவல்துறைக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது . இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மைசூருவில் சந்தித்து பேசியதும் அதற்கான செலவை மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் ஏற்றுக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஜா மற்றும் குமாவத் ஆகியோரால் மொபைல் போன்களை அழித்து எரித்ததாகக் கூறப்படும் நான்கு குற்றவாளிகளின் நகல் சிம் கார்டுகளைப் பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.