உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஆகவே, உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.) தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பன்னாட்டு நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், உலகளவில் சிறப்பாகச் செயல்படும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
ஆகவே, வேகமாக வளரக்கூடிய பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, உலக பொருளாதார வளர்ச்சியில் 16 சதவீதத்துக்கும் மேலான பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரக் கொள்கைகளும், நிலையான அரசியல் சூழலும் முக்கியக் காரணமாகும்.
எனினும், உலக பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது போன்ற சிக்கல்கள் காரணமாக, இந்தியாவும் பல்வேறு சவாலான சூழல்களை எதிர்கொண்டுதான் வருகிறது. ஆகவே, விலை ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், நிதி ஸ்திரத்தன்மையை பராமரித்தல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
அதேசமயம், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு கையாளுகை ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க, அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகளும், அதிக மக்கள் தொகையும், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களும் இந்தியாவுக்கு சாதகமான அம்சங்களாக உருவெடுத்திருக்கின்றன.
கொரோனா தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டிருக்கிறது. கடந்த 2022 – 2023 நிதியாண்டில் பணவீக்கம் ஏற்ற இறக்கமுடன் இருந்தாலும் தற்போது குறைந்திருக்கிறது. நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டி இருக்கிறது.
நிகழாண்டின் தொடக்கத்தில் நிலவிய சர்வதேச நிதிப் பிரச்சனைகளின் பாதிப்பு இந்திய நிதித் துறையின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிதிப் பற்றாக்குறை குறைந்திருந்தாலும், அரசுக்கான கடன் சுமை அதிகமாகவே உள்ளது. எதிா்பாராத நிதிப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்தபோது, பல்துறை சார்ந்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தலில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தியது, பிற நாடுகளுக்கும் உதாரணமாக இருந்தது. முறைசாரா துறைகளை தொடர்ந்து முறைப்படுத்தப்படுவது, நிதித்துறை நல்ல நிலையில் உள்ளது, பட்ஜெட் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது ஆகியவை நல்ல முன்னேற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
இதன் காரணமாக, 2023-24-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.8% மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும். 2023-24 மற்றும் 2024-25-ம் நிதியாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருக்கும்.
எனினும், பொதுக் கடன் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் திறன் மிகுதியாக உள்ளது. ஆனாலும் அவர்களின் ஆற்றல் முழுவதுமாக பயன்படுத்தப்படவில்லை. எனவே, ஒருங்கிணைந்த முயற்சியுடன், நாட்டில் உள்ள கல்வித்தரம், திறன் மேம்பாடு மற்றும் பெண் தொழிலாளர் சக்தி ஆகியவற்றை உயர்த்தி, அதனால் இன்னும் அதிக பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய முடியும்” என்று தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஐ.எம்.எஃப்.புக்கான இந்திய பிரதிநிதிக் குழுவைச் சோ்ந்த நட்டா செளயீரி கூறுகையில், “இந்தியா விரைவான வளா்ச்சியை அடைந்து வருகிறது. பிற நாடுகளின் வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது, உலக பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்களிப்பாளா் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நிகழாண்டுக்கான உலக வளா்ச்சியில் இந்தியாவின் பங்கு 16 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்” என்றாா்.