ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கன மழையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தற்போது வரை பொது மக்கள் மீளாத் துயரத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மாநகர், புறநகர் மக்கள் அடிக்கடி புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர். புயல், மழை இயற்கை நிகழ்வு என்றாலும் மழை நீர் தேங்கி நிலைமை மோசமானதற்கு ஆறுகள், சிற்றோடைகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், முகத்துவாரங்கள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே இதற்கு காரணம்.
இயற்கை வளங்களை அழிவிலிருந்தும், மாசுபடாமலும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இதில் குடிமக்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பாதிப்புகளுக்கு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியே காரணம்.
மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நிவாரணம், மறுவாழ்வு திட்டங்களுக்கு பெரும் தொகையை அரசு செலவிட்டு வருகிறது. ஆனாலும், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை.
நீர்நிலைகளின் பரப்பு குறைதல், நீர்வரத்து, வெளியேற்றும் கால்வாய்கள் காணாமல் போவது ஆகியவை, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தீர்ப்பாயம் கவலை கொள்கிறது.
* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எத்தனை நீர்நிலைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் புறம்போக்குகள் இருந்தன? இப்போது எத்தனை உள்ளன? அவற்றின் நீர் சேமிப்பு அளவு எவ்வளவு?
* நீர்நிலைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் புறம்போக்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள், சட்ட விரோத கட்டுமானங்கள் எவ்வளவு?
* ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் என்ன? அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?
* சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் எவ்வளவு?
* நீர்நிலைகளை பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் என்ன?
* வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதுகாக்க வகுக்கப்பட்ட விதிமுறைகள் என்ன?
*ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்க சி.எம்.டி.ஏ., நகர ஊரமைப்புத் துறையால் எடுக்கப்பட்ட திட்டமிடல், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்ன?
* தற்போதுள்ள நீர்நிலைகள், கைவிடப்பட்ட குவாரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியுமா?
* மழை, வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகள் என்ன?
இவை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 1ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.