காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதியும், நீதிக்கான சீக்கியர் அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அந்த சதி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
மேலும், இந்த சதித் திட்டத்தில் இந்திய அதிகாரியுடன் இணைந்து ஒரு ஆளை கூலிக்கு அமர்த்தியதாக நிகில் குப்தா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், “நிகில் குப்தாவும், சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசு அதிகாரியும் மே மாதம் முதல் தொலைப்பேசி வழியாகவும், மின்னணு தொடர்பு மூலமாகவும் பல முறை தகவல்கள் பரிமாறியுள்ளனர்.
அப்போது, சிசி1 கொலைக்கு திட்டமிடுமாறு நிகில் குப்தாவிடம் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலாக குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. சிசி1-ன் உத்தரவின் படி, பன்னுனைக் கொலைச் செய்வதற்காக தனக்கு வேண்டிய ஒருவரை நிகில் குப்தா அமர்த்தி இருக்கிறார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்டவர் அமெரிக்காவின் போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய தகவலாளி” என்று தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கி இருக்கிறது. அத்தகவல்கள் கவலை அளிப்பவையாக இருக்கின்றன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கனடாவைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை. இது 2 நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரிட்டன் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “எங்கள் நாட்டு குடிமகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால், அதனை ஆராய நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இது போன்ற சிறிய சம்பவங்கள் உலகின் பெரிய பொருளாதாரம், ஜனநாயகம் கொண்ட 2 நாடுகளின் உறவுகளை சீர்குலைக்க முடியாது. இந்த உறவினை வலுபடுத்த இரு நாடுகளிடமும் உறுதியான ஆதரவுகள் உள்ளன. இது முதிர்ச்சியான நிலையான உறவு என்பதின் தெளிவான அறிகுறி” என்று தெரிவித்திருக்கிறார்.