திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த 2 இளைஞர்கள், புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் நடந்த இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெக்தீப் எப்படி பேசுவார், நடந்துகொள்வார் என்பது குறித்து இமிடேட் மற்றும் மிமிக்ரி செய்து கிண்டல் செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ எடுத்தார்.
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், இது வெட்கக்கேடான செயல் என்று குறிப்பிட்டார். ஜெக்தீப் தன்கருக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதை குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் வருத்தமும், வேதனையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெக்தீப் தன்கரை சந்தித்து தனது வருத்தத்தையும், வேதனையும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு எம்.பி.க்கள் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் அரசியல் சாசன அலுவலகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கடுமையான தவறுகள் குறித்து எனது ஆழ்ந்த கவலைகளையும், வேதனைகளையும் தெரிவித்தேன். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட யாரும் எம்.பி.க்களின் இத்தகைய செயலை ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.