3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்புமீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளது. வரலாற்றில் இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை தூத்துக்குடியில் பதிவானது.
இதனையடுத்து பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு காட்டாற்று வெள்ளம் சென்றது. மேலும் ஏராளமான வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்க வேண்டிய நிலை உருவானது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள வீட்டில் 3 நாட்களாக வெள்ளத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியே வர முடியாத படி சிக்கிக்கொண்டார்.
அமைச்சரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. மின் வெட்டு மற்றும் வெள்ளத்தில் சிக்கியதால் வெளியே வர முடியாத நிலை உருவானது. இதனையடுத்து சுமார் 3 நாட்களுக்கு பிறகு அமைச்சரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்டு லாரியில் அழைத்து வந்தனர்.
ஒரு அமைச்சரை மீட்கவே இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டால், எவ்வாறு திமுக அரசு பொதுமக்களை காப்பாற்றும் என கேள்வி எழுகிறது. இது திமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்தை காட்டுவதாக தெரிகிறது.