பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலைந்ததன் பின்னணியில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டோம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 1990-1993, 1997-1999, 2013-2017 ஆகிய காலகட்டங்களில் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். ஊழல் வழக்கில் இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், உடல் நிலை சரியில்லாததைக் காரணமாகக் காட்டி, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டார். நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாடு சென்றவர், அதன் பிறகு திரும்பி வரவே இல்லை.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தலில் நிற்கும் முடிவோடு மீண்டும் பாகிஸ்தான் திரும்பி இருக்கிறார். அதற்கேற்றார் போல் அவரது தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்த தனது கட்சியினருடன் நவாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது, “நான் பிரதமராக பதவி வகித்த 3 ஆட்சிக் காலங்களிலும் இராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழியக் காரணம் இந்தியா அல்ல. அவ்வளவு ஏன், அமெரிக்காவோ ஆப்கானிஸ்தானோ கூட அல்ல. நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை 2018-ம் ஆண்டு, அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, இராணுவம் கொண்டு வந்தது.
இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தை இராணுவம் மீறியபோது, அதனை நீதிபதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் என வரும்போது பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் செயலுக்கு ஒப்புதல் அளித்தனர்” என்று கூறியிருக்கிறார்.