தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டது. வெள்ள நீரில் சென்னையை மிதக்கவிட்டது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் அப்படியே இருந்தது. அத்துடன் கழிவுநீரும் கலந்துவிட்டது. இதனால், கொசு உள்ளிட்டவை உற்பத்தியாகி மனிதர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவியது.
இதனிடையே, தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டதால், காலை, மாலை நேரங்களில் காற்றில் வைரஸ் எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டு, காய்ச்சல் மற்றும் சளி ஆகிய நோய்கள் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், காய்ச்சல் மற்றும் சளி ஆகிய நோய் பரவல் காரணமாக அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள டாக்டர்கள், ஈரப்பதத்துடன் கூடிய காற்று அதிக அளவில் வீசுவதால் மூச்சுப் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் காலை மாலை வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்றும், சூடான உணவுகளைச் மட்டுமே சாப்பிட வேண்டும், அப்படி செய்வதன் மூலம் நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.