மாநிலங்களவையில் இன்று, 2009-14ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக, 940% அதிகரித்துள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளின் (என்.எச்.) மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முதன்மைப் பொறுப்பாகும். நாடு தனது விரிவான சாலை மற்றும் ரயில் வலைப்பின்னலைப் பராமரிப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் எதிர்கொள்ளும் சவால்களை அரசு தீவிரமாக எதிர்கொள்கிறது.
பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக விளங்கும் உள்கட்டமைப்புத் துறை விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பங்களிக்கிறது. இதன்படி, அமைச்சகத்தின் சராசரி வருடாந்திர வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு 2009-14 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடி என்பதிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக 940% அதிகரித்துள்ளது.
அதிவேக வழித்தடங்கள் உட்பட 4 வழி மற்றும் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் நீளம் மார்ச், 2014-ல் சுமார் 18,371 கி.மீ. என்பதிலிருந்து இதுவரை சுமார் 46,179 கி.மீ என 250% அதிகரித்துள்ளது. 2 வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் மார்ச், 2014-ல் சுமார் 27,517 கி.மீ என்பதிலிருந்து சுமார் 14,870 கி.மீ என குறைந்துள்ளது. இது இப்போது என்.எச் வலைப்பின்னலில் சுமார் 10% மட்டுமே.
ரயில் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதைப் பொறுத்தவரை, இந்திய ரயில்வே முழுவதும் புதிய பாதை, பாதை மாற்றம் மற்றும் இரட்டிப்புத் திட்டங்களுக்கான சராசரி வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடு 2009-14 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.11,527 கோடி என்பதிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ.67,199 கோடியாக 480% அதிகரித்துள்ளது.
01.04.2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே முழுவதும், சுமார் 46,360 கி.மீ நீளமுள்ள 459 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் (189 புதிய பாதை, 39 கேஜ் மாற்றம் மற்றும் 231 இரட்டிப்பு) திட்டமிடல் / ஒப்புதல் / கட்டுமான கட்டத்தில் உள்ளன. 2014-23 ஆம் ஆண்டில், சுமார் 25,871 கி.மீ நீள ரயில்வே பிரிவுகள் (5,785 கி.மீ புதிய பாதை, 5,749 கி.மீ கேஜ் மாற்றம் மற்றும் 14,337 கி.மீ இரட்டிப்பு) தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.