காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை. எங்களிடம் நிதி கேட்கிறது. கடந்த முறை கூட்டத்தின்போது டீயும் சமோசாவும் கொடுத்தார்கள். தற்போது டீயும் பிஸ்கட்டும் கொடுக்கிறார்கள் என்று ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. பிந்து புலம்பி இருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டத்தின் முதல் கூட்டம் பீகார் மாநிலத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு, மும்பையில் 2 மற்றும் 3-வது கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், இண்டி கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் கடந்த 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது. எனவே, கூட்டம் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 19-ம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டீயும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, தேர்தலுக்கு நிதி திரட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி 138-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், 138 ரூபாய், 1,380 ரூபாய், 13,800 ரூபாய் நிதி வழங்கும்படி கூறியிருக்கிறது.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியிடம் சமோசாவுக்குக் கூட காசு இல்லை. தேர்தல் செலவை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ என்று கூட்டணிக் கட்சியான பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் புலம்பித் தள்ளி இருக்கிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. சுனில் குமார் பிந்து கூறுகையில், “இண்டி கூட்டத்தில் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் உறுதியான முடிவை எதிர்பார்த்தனர். ஆனால், இந்தக் கூட்டமும் தீர்க்கமான முடிவுகள் இல்லாமல் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
அதேசமயம், முன்பெல்லாம் கூட்டணிக் கட்சிக் கூட்டங்களில் டீயும், சமோசாவும் தருவார்கள். ஆனால், நடந்து முடிந்த கூட்டத்தில் வெறும் டீயும் பிஸ்கட்டும் மட்டுமே தந்தார்கள். அதோடு, தாங்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாகக் கூறி, தங்களுக்கு ஆதரவாக 138, 1,380 அல்லது 13,800 ரூபாய் நன்கொடை வழங்குமாறு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொண்டது” என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்வதுபோல அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேசமயம், இண்டி கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் விலகப்போவதாக அரசல் புரசலாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், அக்கட்சியின் எம்.பி. இப்படி கிண்டல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.