இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, டெல்லியில் நேற்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல் தெரிவித்தார்.
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் வேகமாக பரவியது. கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் உருமாறி கொண்டே இருக்கிறது. இது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ஜே.என்.1 வகை கொரோனா தொற்று, வேகமாக பரவக்கூடியது எனவும், அதேசமயம் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லியில் நேற்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல் தெரிவித்தார்.