சபரிமலை விமான நிலைய பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது.
சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டம் எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் ரூ.4,000 கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான நிலம் கையக்ப்படுத்தும் பணிக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எருமேலி தெற்கு மற்றும் மணிமாலா கிராமங்களில் 1,039.876 ஹெக்டேர் நிலம் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை முதன்மைச் செயலர் டிங்கு பிஸ்வால் பிறப்பித்த உத்தரவில், சமூக பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை, நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கோட்டயம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக எருமேலி தெற்கு மற்றும் மணிமாலா கிராமங்களில் மொத்தம் 1,039.876 ஹெக்டேர் (2,570 ஏக்கர்) நிலம் கையகப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதில் சேரவள்ளி தோட்டத்திற்கு வெளியே அமைந்துள்ள 307 ஏக்கர் நிலமும் அடங்கும். நிலத்தின் சமீபத்திய டிஜிட்டல் மேப்பிங் திட்டத்திற்கு உண்மையில் தோட்டத்திற்கு வெளியே 165 ஏக்கர் மட்டுமே தேவை என்று பரிந்துரைத்துள்ளது.