குவைத்தின் புதிய அமீராகப் பதவியேற்ற ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மேலும், வரும் ஆண்டுகளில் இந்தியா- குவைத் உறவுகள் மேலும் வலுவடையும் என்றும், குவைத்தில் உள்ள இந்திய சமூகம் தொடர்ந்து செழிக்கும் என்றும்
பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
குவைத் நாட்டின் அமீராக இருந்த ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து, அந்நாட்டின் புதிய அமீராக அவரது சகோதரர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பதவியேற்றிருக்கிறார்.
83 வயதான ஷேக் மிஷால் குவைத்தின் 3-வது ஆட்சியாளராவார். கடந்த 2021-ம் ஆண்டே ஷேக் நவாஃப் தனது பெரும்பாலான பொறுப்புகளை ஷேக் மிஷாலிடம் ஒப்படைத்து விட்டார். ஷேக் மிஷால் ஏற்கெனவே, 2004 முதல் 2020 வரை தேசிய காவல் படையின் துணைத் தலைவராகவும், 1960-களில் உள்துறை அமைச்சகத்தில் சேர்ந்த பிறகு 13 ஆண்டுகள் மாநில பாதுகாப்புத் தலைவராகவும் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குவைத்தின் புதிய அமீராகப் பதவியேற்றிருக்கும் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “குவைத் நாட்டின் அமீராகப் பொறுப்பேற்றுள்ள ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ்வுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா- குவைத் உறவுகள் மேலும் வலுவடையும். குவைத்தில் உள்ள இந்திய சமூகம் தொடர்ந்து செழிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.