ஜம்மு காஷ்மீரின் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ராணுவ வாகனங்களை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லடாக் பகுதியில் இருந்து துருப்புக்களை அகற்றவும், இந்த பகுதியில் படைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் இந்திய இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதி இது என சந்தேகிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக பூஞ்ச் செக்டாரில் இருந்து ராஷ்டிரிய ரைபிள்ஸின் சீருடைப் படையை லடாக்கிற்கு இந்தியா மாற்றியது.
இந்நிலையில், நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தேரா கி கலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.