வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமான , ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
திருப்பள்ளியெழுச்சி நடைபெற்ற பின்னர் ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சிம்ம கதியில் புறப்பட்ட நம்பெருமாள் வலதுபுற மதில்படி வழியாக ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
அங்கு நம்பெருமாளுக்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை வாசித்தனர். இதைத் தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள்.அப்போது பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் வழிபட்டனர்.