ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன், இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ராணுவ வாகனங்களை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையத்து அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினர் பிடித்து சென்றதாகவும், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேரா கி கலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவம், போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அமைதியை நிலைநாட்ட மாவட்டங்களில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.