தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது மூலம் கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து முக்கிய காரணமாக அமைந்தார்.
மேலும் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகமுக்கியமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இந்த சதம் அமைந்தது. இதற்கு ரசிகர்களும் சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து அவர், ” சஞ்சு சாம்சன் எவ்வளவு திறமையான கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் அவர் ஆடிய இன்னிங்ஸ்களை பற்றி ஒவ்வொருவரும் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே மீண்டும் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன். ஏனென்றால் இந்த இன்னிங்ஸ்-க்கு முன்பு வரை அவருக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்தது.
சில நேரங்களில் அணியில் இருந்து நீக்கப்படுவார், சில நேரங்களில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ஒரு சதத்தை விளாசியதன் மூலமாக தேர்வு குழுவினரை மட்டும் சஞ்சு சாம்சன் ஈர்க்கவில்லை. அவர் தேர்வுக் குழுவினரை அழுத்தத்தில் தள்ளியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த இன்னிங்ஸ்-க்கு பின் இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது.
அதனால் திறமையான சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய அணிக்கு எப்போதும் பலமான மிடில் ஆர்டர் அமைந்துவிடும். ஆனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனை போன்ற ஒரு வீரரின் தேவை உள்ளது. அதனால் தான், சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் தொடங்கியதாக கூறுகிறேன்.
அவரால் சூழலுக்கு ஏற்ப விளையாட முடிவதன் மூலமாக அனுபவத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சரியான நேரத்தில் அட்டாக்கை தொடங்கி, உடன் விளையாடும் வீரரையும் அழைத்து செல்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதோடு, ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
அதேபோல் எந்த பவுலரை அடிக்க வேண்டும் என்று கணக்கீடுகளையும் சஞ்சு சாம்சனால் எளிதாக அறிய முடிகிறது. அது அவ்வளவு எளிதாக விஷயமல்ல. இந்த ஒரு இன்னிங்ஸ் மூலமாக சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது மீண்டும் நிரூபித்துள்ளர்” என்று கூறினார்.