திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களும், புத்தகங்களும், முக்கிய ஆவணங்களும், ஆடை, அணிகலன்களும் என அனைத்தும் நாசமானது.
பால், உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். மின்சாரம், இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி இருந்தது.
திருநெல்வேலியில் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். தென் மாவட்டங்களில் தற்போது மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்ட வகையில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 2 ஆயிரத்து 355 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 700 குடிசைகள், 170 கான்கிரீட் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நான்கு மாவட்டங்களிலும் 1 இலட்சத்து 83 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுதவிர 318 பசு, எருமை மாடுகள், 2 ஆயிரத்து 587 ஆடுகள், 41 ஆயிரத்து 500 கோழிகள் இறந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.