பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்தில், பெஷாவர் விரைவு இரயிலில், இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி இரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 8.20 மணிக்கு பெஷாவர் விரைவு இரயில் வந்தது. அதில், இருக்கைக்கு அடியில் சந்தேகத்திற்கிடமான பை இருந்தது. அங்கிருந்த காவலர் ஒருவர் பையைத் திறந்து பார்த்தார். அதில், வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காவலர் இது குறித்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவிற்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து, இரயில் நிலையம் முழுவதையும் காவல்துறை சுற்றி வளைத்தது. இரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர்.
தகவலின் பேரில், வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையிலிருந்த, பேட்டரி, வயர் மற்றும் சுவிட்சுகளில் இணைக்கப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர்.
இந்த வெடிகுண்டு 5 கிலோ எடை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில், 2 கிலோகிராம் வெடிப்பொருள் இருந்தது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் இரயிலுக்குள் வெடிகுண்டு வெடித்ததில், இரண்டு பேர் இரண்டு பேர் உயிரிழந்ததும், ஆறு பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.