விடுமுறையொட்டி, பொது மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதையெட்டி, விழாக்கால கட்டணத்தை விட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
இதனால், சென்னையில் பணியாற்றி வரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இரவு நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. இன்று சனிக்கிழமை என்பதால், மேலும், கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள், சாதாரண நாட்களை விட 2 மடங்கு கூடுதல் கட்டணங்களை வசூலித்தது.
குறிப்பாக, 8,635 ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் சென்றதாகவும், இதில், 1,545 ஆம்னி பேருந்துகளில் விதிகள் மீறி அதிக கட்டணம் வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது.
தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், போக்குவரத்துறை அதிகாரிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
















