தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக, குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய அருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் மழை ஓய்ந்து, நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து கடந்த புதன் கிழமை ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்துவிட்டு, குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று வாரஇறுதி விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.