நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று காலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதை அடுத்து பனி படர்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியதை போல் பனி காணப்பபடுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவுகிறது. இந்த மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டில் நவம்பர் முதல் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் உறைபனி ஏற்படவில்லை.
நேற்று காலை முதலே ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
இன்று சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், புற்கள், சாலைகள் மீது உறைபனி அதிகளவில் இருக்கிறது.
அதிலும் தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது போல் உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உள்ளது. மேலும் காந்தல், பிங்கர் போஸ்ட் பகுதிகளிலும் அதிக அளவு உறைபனி உள்ளது.
சுமார் 50 நாட்களுக்கு பிறகு உறைபனி தொடங்கியது. காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரால் மக்கள் நடுங்குகிறார்கள்.
சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் இந்த உறைபனி அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
தற்போது பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சாலைகள், வாகனங்களின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காட்சியளிக்கிறது. இந்த நிலையில் கடுங்குளிரால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.