திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான நுட்பத்தை வழங்கும் கிசான் ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்திருக்கிறது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த கடன் திட்டத்துக்காக சென்னை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விவசாயத்துறையில் பயன்படுத்தப்படவிருக்கும் கிசான் ட்ரோன் பற்றி, ஆங்கில நாளிதழில் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தக் தனது கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இதோ இந்திய விவசாயத்தின் “ட்ரோன் தருணம்”!
நமது விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதிலும், மாற்றியமைப்பதிலும் வேளாண் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு உண்மையான திருப்புமுனையாக எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது என்பது பற்றிய எனது கட்டுரை. இது “ட்ரோன் இயக்கத்தை” முன்னறிவிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, “கிசான் ட்ரோன்களின் முன்னேற்றம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.