இந்தியாவில் கொரோ பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் தடுப்பூசி டோஸ் தேவையில்லை என இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா தொற்று 4 ஆண்டுகளாகியும், அடுத்தடுத்து புதிதாக உருமாறி வருகிறது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் தொடர்பாகவும், தடுப்பூசி அவசியம் குறித்தும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா செய்தியாளர்களிடம் பேசினார்.
தற்போதைய நிலவரப்படி தடுப்பூசி தேவையில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், வியாதிகளுக்கு நாள்தோறும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல், இருமல், அவ்வப்போது ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் குணமாகிவிடும் என்றும் கூறினார்.
இந்த வைரஸில், 400 க்கும் மேற்பட்ட துணை வகைகள் கண்டறிந்துள்ளோம், அதிர்ஷ்டவசமாக, இந்த ஓமிக்ரான் வகைகள் எதுவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் பீதி அடைய தேவையில்லை என்று டாக்டர் என்.கே. அரோரா கூறினார்.