ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த பெண் ஊடகவியலாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டு அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை தொடர்ந்து தற்காலிக அதிபராக விளாடிமர் புடின் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதின் ரஷ்ய அதிபரானார். அவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்துஅதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக புடின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை ரஷ்ய தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து ரஷ்ய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக எகாத்ரினா தெரிவித்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.