சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் தெய்வீக ஆன்மிக விழா தொடங்கியது. ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் சுவாமி அவதேஷானந்த் ஜூனகஹாரா ஆச்சார்ய பீடத்தை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஸ்ரீதத் ஜெயந்தி’ என்கிற பெயரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விழாவை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், யோகா குரு சுவாமி ராம்தேவ், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் சமய மாநாடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நாடு முழுவதும் உள்ள துறவிகள் கலந்து கொள்கிறார்கள்.
டிசம்பர் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் உரையாற்றிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “நான் ஆச்சார்யா ஸ்ரீயின் ஹரிஹர் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறேன். இன்று நிச்சயம் எனக்கு நல்ல நாள். பல மகான்களை ஒன்றாகப் பார்ப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
மகான்களின் வார்த்தைகளால் பல நன்மைகளைப் பெறுகிறோம். இது சமுதாயத்தில் பணியாற்ற எனக்கு உத்வேகம் அளிக்கிறது. கீதையில் சாரமும், போதனைகளும் உள்ளன. சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக இருக்க கீதை மிகவும் முக்கியமானது. அதனால்தான் பள்ளிகளில் கீதையை அமல்படுத்தி இருக்கிறோம். இது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மற்றும் சமுதாயத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்யும்” என்றார்.
ஸ்ரீ ஹரிஹர் ஆசிரமத்தில் ‘தெய்வீக ஆன்மிக விழா’வைத் தொடக்கிவைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சனாதனம் நித்தியமானது. சனாதனம் இருந்தது, இருக்கிறது, என்றும் நிலைத்திருக்கும். இந்த உலகத்தில் எஞ்சி இருப்பதும் சனாதனம்தான்.
பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு நபரை புனிதப்படுத்தும். பாரதிய மரபுகளில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஒரு விஷயத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவை உங்களை புனிதப்படுத்தும். எங்களுடையது ஒரு இயக்கமாகவோ அல்லது போராட்டமாகவோ இருக்காது. நாங்கள் இந்து சமுதாயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குழுவும் அல்ல.
எங்களுடையது இந்து சமுதாயம் முழுவதையும் ஒழுங்கமைத்து விரிவுபடுத்தும். நாம் இன்னும் அணுகாத எத்தனையோ இந்துக்கள் இருக்கிறார்கள். ஆகவே, நாம் எல்லா இடங்களிலும் சென்று அனைவரையும் அடைய வேண்டும். ஒருவர் சில விஷயங்களில் உடன்படலாம், சிலவற்றில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், நாம் அனைவரையும் இணைக்க வேண்டும்” என்றார்.