303 இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்ற விமானம், பிரான்ஸில் 3 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, நிகராகுவா நாட்டுக்கு 303 இந்திய பயணிகளுடன் கடந்த 21-ம் தேதி வாடகை விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
ஆனால், அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானம் புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்தது.
இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதன் பிறகு, பயணிகள் மற்றும் விமான பணிக் குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பேர் மேல் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பயணிகளில் பலர் இந்தியிலும், மற்றவர்கள் தமிழிலும் பேசினர்.
இதையடுத்து, நீதிபதிகளின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர். அப்போது, பயணிகள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து, விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள் விமானம் புறப்பட அனுமதி அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. ஆனால், எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா அல்லது செல்ல வேண்டிய இடம் நிகராகுவே என்பதால் அங்கு செல்லுமா அல்லது துபாய் செல்லுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.