புதுப்பிக்கப்பட்ட நடைமேடை, புதிய சைன்போர்டுகள், எஸ்கலேட்டர், லிஃப், சுவர்களில் வரையப்பட்ட ராமரின் ஓவியங்கள்…ஆம். நீங்கள் காணும் இந்த காட்சிகள் அயோத்தி ரயில் நிலையத்தில் தான்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அயோத்தி நகரில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோயில் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் நின்று, கோயிலின் தோற்றத்தையும் உணர்வையும் வழங்கும் நோக்கில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
“நாங்கள் முதல் முறையாக இங்கு வந்துள்ளோம். ஒரு விமான நிலையத்திற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த ஸ்டேஷனில் நவீன வசதிகள் மட்டுமின்றி, இந்து புராணங்களின் வரலாறு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக டெல்லியை சேர்ந்த புருஷோத்தமன் என்ற சுற்றுலா பயணி தெரிவித்தார்.
மறுசீரமைப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவதாக, அதிக கழிவறைகள், தங்குமிடங்கள், பயணச்சீட்டு அலுவலகத்தை கொண்ட புதிய நிலைய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
சுமார் 50,000-60,000 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
ராமர் கோயிலின் முகப்பைப் போன்று ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இது அயோத்தியின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும். வெளியில் இருந்து பார்த்தால் கோயிலை ஒத்திருந்தாலும், பயணிகளின் வசதிக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி செல்லும் பிரதமர் மோடி, புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.