கனமழையின் காரணமாக, துண்டிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யாத திமுக அரசால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலி செல்லும் சாலை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். இந்த சாலை, ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக உடன்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன.
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக செட்டியாபத்து, இலட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை. மேலும், பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாவது நாளாக உடன்குடி – திருநெல்வேலி இடையே போக்குவரத்து தொடங்கவில்லை.
இந்த சாலை வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், ஏராளமான பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்த சாலையை பத்து நாள் ஆகியும் சரிசெய்யாததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.