முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியாவின் பெயர் சாதனை புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது, அதற்கு இவர் ஹிந்து என்பது தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வரலாற்றில் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் வெல்ல முடியாமல் தோல்வியடைந்தது.
இந்நிலையில் 2வது போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த தங்களுடைய டாப் பவுலர்களின் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அந்த பட்டியலில் வாசிம் அக்ரம் 46, இம்ரான் கான் 45, இக்பால் காசிம் 21, சர்ப்ராஸ் நவாஸ் 50, முஷ்டாக் அஹ்மத் 22, சக்லைன் முஸ்தக் 14, முகமது ஆசிப் 13 விக்கெட்களை எடுத்து டாப் இடங்களை பிடித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியா மண்ணில் 21 விக்கெட்களை எடுத்த இக்பால் காசிமின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகளில் 24 விக்கெட்களை எடுத்த டேனிஷ் கனேரியாவின் பெயர் இடம் பெறவில்லை.
பிரபல கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த ஹிந்து ஆவர். இந்தியா போன்று மதச்சார்பற்ற நாடாக இல்லாமல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
பாகிஸ்தானுக்காக டேனிஷ் கனேரியா 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளையும், 18 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களையும் வீழ்த்திருக்கிறார்.
இந்த நிலையில் டேனிஷ் கனேரியா இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது பிக்சிங் செய்து சிக்கிக்கொண்டார்.
இதனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை டேனிஷ் கனேரியா கூறி வருகிறார்.
தாம் அணியில் விளையாடிய போது அப்போதைய கேப்டனாக இருந்த ஆப்ரிடி, தம்மை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் தாம் ஹிந்து என்பதால் தம்மை சரிசமமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நடத்தவில்லை என்றும் தன் மீது வீண் பழி சுமத்தி ஓரங்கட்ட முயற்சி செய்வதாகவும் டேனிஸ் கனேரியா குற்றம் சாட்டி வந்தார்.
Just look at the audacity of Pakistan Cricket Board. I took 24 wickets in 5 matches in Australia but they removed my name from the list. The living example of sheer discrimination against me. pic.twitter.com/HhkamhdFMc
— Danish Kaneria (@DanishKaneria61) December 23, 2023
இந்நிலையில் தன் பெயர், பட்டியலில் இடம் பெறாததை குறித்து, சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி உள்ள கனரியா,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்யும் அநியாயத்தை பாருங்கள். நான் இதுவரை ஐந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய பெயர் இந்த சாதனை புத்தகத்தில் இடம் பெறவில்லை. பாகிஸ்தானில் எந்த அளவுக்கு மத வேறுபாடு கடைபிடிக்கிறது என்பதற்கு நான் ஒரு வாழும் உதாரணம் என்று டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது.