உலகளாவிய அரங்கில் இந்திய அணியை வெற்றி பெற வைப்போம், நம்பிக்கையுடன் விளையாடி பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்களுக்கான இடத்தை பிடிப்போம், என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை சலிமா டெட் தெரிவித்துள்ளார்.
2024 ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் நடைபெறவுள்ள பெண்கள் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்த தகுதி சுற்றுகள் ஜனவரி 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தகுதி சுற்றில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்பிரிவில் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி அணிகளும் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது போட்டியில் அமெரிக்காவுடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் என்று இந்திய ஹாக்கி வீராங்கனை சலிமா டெட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ” ராஞ்சியில் நடைபெறும் இந்தப் போட்டி தகுதி சுற்று மட்டுமல்ல நாங்கள் விரும்பும் விளையாட்டில் எங்களின் அர்ப்பணிப்பையும் இடைவிடாத மனப்பான்மையையும் வெளிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகும் ” என்று கூறினார்.
மேலும் அவர், ” நாங்கள் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். நம்பிக்கையுடன் விளையாடி பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்கள் இடத்தை பிடிப்போம், அந்த உலகளாவிய அரங்கில் இந்திய அணியை வெற்றி பெற வைப்போம் “என்று கூறினார்.